எதற்காக ரஷியா இந்த விடயத்தில் மூக்கை நுழைக்க வேண்டும்! கொந்தளித்த கிளிண்டன்! நடக்கப்போவது என்ன ?

0
1
ஹிலாரி கிளிண்டன்
ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு உள்ளது என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடு: ஹிலாரி கிளிண்டன் பரபரப்பு குற்றச்சாட்டு
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு உள்ளது என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் (70) கடும் போட்டியில் உள்ளனர். இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் ஹிலாரிக்கு சாதகமாக அமைந்துள்ளன. ஆனாலும் டிரம்ப் அயர்ந்துபோகாமல், பிரசாரத்தில் ஹிலாரி மீது எதிர்ப்பு கணைகளை வீசி வருகிறார்.

இந்த நிலையில், தனது புதிய பிரசார விமானத்தில் பயணம் செய்தவாறு, ஹிலாரி நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். நமது தேர்தல் நடவடிக்கைகளில் இதுவரை ஒருபோதும் வெளிநாட்டு அதிகார சக்தியின் எதிர்ப்பை சந்தித்தது இல்லை. நடந்து முடிந்த ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் ஏற்கனவே ஊடுருவல் இருந்தது.

நமது நாட்டின் மிகப்பெரிய கட்சிகளின் வேட்பாளர்களில் ஒருவர், இன்னும் அதிகமாக ஊடுருவுமாறு ரஷியர்களை கேட்டுக்கொண்டதெல்லாம் நடந்தது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஒரு நிருபர், “அப்படியென்றால், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு டிரம்பை தேர்ந்தெடுப்பதற்கு ரஷியர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விக்கு உடனடியாக ஹிலாரி பதில் அளிக்காமல், நிதானமாய் யோசித்த பின்னர், “டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டபோதே, இந்த மாதிரி செயல்கள் நடந்ததாக நான் கருதுகிறேன்” என பதில் அளித்தார்.

மேலும், “நீங்கள் ஒரு விஷயத்தை பார்க்கலாம். அவர் ஏற்கனவே (ரஷிய அதிபர்) புதினுடைய கொள்கைகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு விட்டார்” என குற்றம் சாட்டினார்.

அமெரிக்க ஊடகங்கள் பலவும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருப்பது குறித்து, உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன. இதை சுட்டிக்காட்டிய ஹிலாரி, “இது நம்பகமான தகவல்கள்தான்” என குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடுகள் இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஒருங்கிணைப்பில் விசாரணை நடப்பதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ ஏடு செய்தி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி ஹிலாரி குறிப்பிடும்போது, “இது நமது தேர்தல் அமைப்புகள், அனைத்து மட்டத்திலும் காப்பாற்றப்படுவதற்கு நாம் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க மக்களின் முடிவை எந்தவொரு நபரும் தலையிட விட மாட்டோம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என கூறினார்.

மேலும், “உண்மை என்னவென்றால், நமது புலனாய்வுத்துறையினர் இந்தப் புகாரை (அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையிடுவது பற்றியது) ஆராய்ந்து வருகிறார்கள். அமெரிக்க தேர்தல் நடைமுறைகளில் ரஷியாவின் தலையீடு பற்றி அவர்கள் முக்கிய கேள்விகளுடன் மிக தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருப்பதாக ஹிலாரி சுட்டிக்காட்டி இருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.