‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல’ புத்தக வெளியீட்டு விழா! சீமானுக்கு மாணவர் அமைப்பு மிரட்டல்!

0
1
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி

‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மாணவர் அமைப்பு ஒன்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறது. ‘

நிகழ்ச்சியின் நோக்கம் புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்’ என வேதனைப்படுகிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவனால் எழுதப்பட்ட, ‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல, இனி என்ன செய்யலாம்?’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடக்க இருக்கிறது.

இந்த விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், திருச்சி வேலுச்சாமி,கெளதமன், காசி ஆனந்தன், மனித உரிமை செயற்பாட்டாளர் பால் நியூமென் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், இளைய தலைமுறை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மாறன் என்பவர்,நிகழ்ச்சிக் குழுவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

பால்நியூமன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கிறார்.

2009 ஈழப்படுகொலைக்கு பின்னர் அது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விசாரணை நடக்கும் போது, புலிகளுக்கும், ஈழ விடுதலைக்கும் பச்சை துரோகம் செய்யும் விதமாக அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில் புலிகள் குறித்து அவதூறான தகவல்களையும் பதிவு செய்தார்.

குழந்தைகளை தமிழீழ போரில் ஈடுபடுத்தியதாகவும்,அவர்களை பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடிங்கி, இராணுவத்தில் இணைத்துக் கொள்வதாகவும், பெண்களுக்கு கட்டாய கருக்கலைப்பை செய்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்.

ஈழ மக்களின் விடுதலைக்கான கட்சி என்று கூவிக்கொண்டு, ஈழ விடுதலையை நோக்கிய பயணத்தை திசை திருப்பிக்கொண்டு இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பால்நியூமன் பதிவு செய்தது சீமானுக்குத் தெரியாமல் நடந்து இருக்க வாய்ப்பில்லை.

இதுதொடர்பாக, பால்நியூமனே அவரின் வாயால் கனடா வானொலியில் ஒப்புக்கொண்டு பேசியது மட்டும் இல்லாது அதை மறுமுறை பதிவு செய்து நியாயம் கற்பித்த ஆடியோ வெளியாகி பலரால் கண்டனத்திற்கு உள்ளாகி கொண்டு இருக்கிறது.

இத்தனை நாள் தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என்று மேடைகளில் உணர்ச்சி பொங்க சீமான் பேசியது அனைத்தும் வெறும் வசனங்கள்தானா?

இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் விழா ஏற்பாட்டாளர்கள் பிரச்சனைகுரியவர்களைத் தவிர்க்கவேண்டும்.

இல்லாவிட்டால் இதே கேள்விகளோடு அரங்கில் உங்களை சந்திக்க வேண்டியது வரும்’ என எச்சரித்திருந்தனர்.

இதுதொடர்பாக, நூலின் ஆசிரியர் பா.ஏகலைவன் கூறுகையில்,

பால் நியூமென் அனைத்து நாடுகளுக்கும் சென்று ஈழ மக்களுக்காகப் பேசி வருகிறார்.

விழாவில், சீமானையும், நியூமெனையும் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

சீமானை அசிங்கப்படுத்துவோம் என மிரட்டுகிறார்கள்.

காவல்துறையிடமும் தேர்தல் ஆணையத்திடமும் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறோம்.

பால்நியூமெனின் கருத்துக்கு அவர்கள் மேடையில் எதிர்ப்பு தெரிவிக்கட்டும். அது ஜனநாய நடைமுறை.

அதைவிடுத்து, ‘கலாட்டா செய்து நடத்தவிட மாட்டோம்’ என்பது சரியான அணுகுமுறை அல்ல.

இவ்வளவு பேசும் மாணவர்கள், கடந்த ஒரு மாதமாக ஈழ விவகாரத்தில் துரோகம் செய்த கட்சிகளுக்கு எதிராக எதாவது பிரசாரம் செய்தார்களா?

நாம் தமிழர் கட்சி மீது மட்டும் பாய்வதில் உள்நோக்கம் இருக்கிறது.

சீமானுக்கும் உங்களுக்குமான பிரச்சினையை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்.

பால் நீயூமென் ஏன் அவ்வாறு பேசுகிறார்? என்பதற்கான விளக்கம் இதே மேடையில் வெளிக்கொண்டு வரப்படும்.

இதற்கான ஏற்பாடு எங்கள் நிகழ்ச்சி நிரலில் இருக்கிறது.

அதைவிடுத்து நிகழ்ச்சியை நடத்த விட மாட்டோம் என்று சொல்வது ஜனநாயகப்பூர்வ நடைமுறை கிடையாது எனக் கொந்தளித்தார்.

எந்தப் பிரச்னையும் இல்லாமல் புத்தக வெளியீட்டு விழா நடக்க வேண்டும் என கடைசி நிமிட பதட்டத்தில் இருக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.